
மார்ச் 25, 1989
சேலத்தில், 1933, ஜூன் 15ல் பிறந்தவர், சி.எல்.ஆனந்தன். இவர் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடனம், சண்டை காட்சிகளிலும், சிறு வேடங்களிலும் நடித்தார். 'ஸ்டன்ட்' சுவாமிநாதனிடம் சண்டைப்பயிற்சி பெற்ற இவர், வாள் சண்டையில் கோலோச்சினார். சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோசப் தளியத், த்ரீ மஸ்கட்டீர்ஸ் என்ற ஆங்கில படத்தை தமிழில், இவரை கதாநாயகனாக்கி, விஜயபுரி வீரன் என்ற பெயரில் தயாரித்தார்.
பாண்டி செல்வராஜ் கதை, வசனம், பஞ்சு அருணாசலம் பாடல்களையும் எழுத, நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்து நடித்தார். காட்டு மல்லிகை படத்தில் புலி, செங்கமலத்தீவு படத்தில் சிறுத்தை, குபேரத்தீவு படத்தில் கரடியுடன், 'டூப்' போடாமல் நடித்தார். தனிப்பிறவி படத்தில் ஜெயலலிதாவின் சித்தப்பாவாக நடித்தார்.
அடுத்த வாரிசு படத்தில் ரஜினியின் முகமூடியுடன் சண்டைக்காட்சியில் நடித்தார். அந்த ஒரு நிமிடம் படத்தில் கமலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். எம்.ஜி.ஆர்., - தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டு, அ.தி.மு.க., உதயமானபோது, இவரும், அ.தி.மு.க.,வில் சேர்ந்து, பிரசார கலை நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் நடித்தார். தன், 56வது வயதில், 1989ல் இதே நாளில் மறைந்தார்.
நடிகை, 'டிஸ்கோ' சாந்தியின் தந்தையான இவரின், மறைந்த தினம் இன்று!

