
மார்ச் 30, 1908
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், மதராஸ் மாகாணத்தின் முதல் இந்திய தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான எம்.என்.சவுத்ரி - லீலா தம்பதிக்கு மகளாக, 1908ல் இதே நாளில் பிறந்தவர் தேவிகா ராணி சவுத்ரி.
இவர், பிரிட்டனில் படிப்பை முடித்தார். அங்குள்ள ஆர்.ஏ.டி.ஏ., அகாடமியில் இசை, நடிப்பு, இயக்கம், கட்டடகலை, உள் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் படிப்புகளையும் முடித்தார். இந்திய நடிகரும், தயாரிப்பாளருமான இமான்ஷு ராயை திருமணம் செய்தார்.
இருவரும் இணைந்து, 'பம்பாய் டாக்கீஸ்' என்ற படப்பிடிப்பு தளத்தை உருவாக்கினர். இவர்கள் இணைந்து, கர்மா என்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்தில் நடித்தனர். தொடர்ந்து, ஆண்டுக்கணக்கில் நடிக்க நடிகர் - நடிகையரை ஒப்பந்தம் செய்து பல படங்களை தயாரித்தனர்.
அசோக்குமாருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். திரைப்பட உலகில் பல திறமைகளுடன் வலம் வந்த இவர், ஹிந்தி, ஆங்கிலத்தில் பல வெற்றிப் படங்களை தந்து, 'டிராகன் லேடி' என, புகழப்பட்டார்.
இவர், 1994, மார்ச் 9ல் தன் 86வது வயதில் மறைந்தார். 'தாதாசாகேப்' விருதை முதலில் பெற்ற நடிகை பிறந்த தினம் இன்று!

