
ஏப்ரல்: பிரபல நடன இயக்குனர் சுந்தரம் - மகாதேவம்மா தம்பதிக்கு மகனாக, சென்னையில் 1973ல் இதே நாளில் பிறந்தவர் பிரபுதேவா. இவர், சிறு வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலைகளை கற்றார். தந்தையிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றினார்.
இதயம் படத்தில், 'ஏப்ரல் மேயில... சூரியன் படத்தில், 'லாலாக்கு டோல் டப்பி...' ஜென்டில்மேன் படத்தில், 'சிக்கு புக்கு ரயிலே..' உள்ளிட்ட பாடல்களுக்கு புயலாக சுழன்றாடி, இளைஞர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்தார்.
லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, ராசய்யா உள்ளிட்ட படங்களில் நடிப்புடன், நடனத்தையும் விருந்தளித்தார்.
காதலா காதலா, வானத்தை போல, உள்ளம் கொள்ளை போகுதே படங்களில், நடிகராகவும் திறமையை வெளிப்படுத்தினார். போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி, 'மாஸ்டர்' என்ற செல்லப்பெயருடன் வலம் வருகிறார்.
'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனின்' 51வது பிறந்த தினம் இன்று!

