
ஏப்ரல் 6, 2011
திருவாரூர் மாவட்டம், செதலப்பதியில் சீதாராமன் -- அபயாம்பாள் தம்பதியின் மகளாக, 1922, ஆகஸ்ட் 15ல் பிறந்தவர் கல்பகம். இவர், சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயிடம் கர்நாடக சங்கீதத்தை கற்றார். இவரது தாய்மாமா வைத்தியநாத சுவாமி, இவரை 8 வயதில், சென்னைக்கு அழைத்து வந்தார்.
கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண அய்யர், டி.எஸ்.வெங்கட்ராம அய்யர் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசை கற்றார். இசைத் துறை தேர்விலும் தேர்ச்சி பெற்றார். வீணை இசையில் அபார திறமையுடன் தஞ்சாவூர் பாணியில் கீர்த்தனைகளை வாசித்து, வித்வான்களின் பாராட்டு பெற்றார்.
டைகர் வரதாச்சாரியிடம் தன் வாசிப்பு திறமையை வெளிப்படுத்தி, சென்னை, கலாஷேத்ராவில் வீணை ஆசிரியையாக சேர்ந்தார். அங்கு வீணை இசையில் பல வித்வான்களை உருவாக்கினார். தமிழக அரசு இசை கல்லுாரியிலும் பேராசிரியையாக பணியாற்றினார்.
'கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலை ஆச்சார்யா' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2011ல் தன் 89வது வயதில் இதே நாளில் மறைந்தார். ரசிகர்களின் நாடி, நரம்புகளை, தன் வீணை நரம்புகளால் மீட்டிய, 'கான வன மயூரி' மறைந்த தினம் இன்று!

