
ஏப்ரல் 9, 1899
திருச்சி மாவட்டம், முசிறி அருகில் பொம்மலாபாளையத்தில், சமஸ்கிருத பண்டிதர் சங்கர சாஸ்திரி - சீதாலட்சுமி தம்பதியின் மகனாக, 1899ல் இதே நாளில் பிறந்தவர், 'முசிறி' சுப்பிரமணிய அய்யர்.
சிறு வயதிலேயே தாயை இழந்த இவர், எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடல்களை கேட்டு அதேபோல் பாடுவதில் வல்லவரானார். எஸ்.நாராயணசாமி அய்யர், கரூர் சின்னசாமி அய்யர் ஆகியோரிடம் கர்நாடக இசையை கற்றார்.
சென்னை, புரசைவாக்கத்தில் இருந்த டி.எஸ்.சபேச அய்யரின் வீட்டிலேயே தங்கி, ஒன்பதாண்டுகள் இசை கற்றார். இவர் கச்சேரிகளில் நிரவலை தனி பாணியில் பாடினார். அது 'முசிறி' பாணி என பிரபலமானது. இவர் பாடிய கிராமபோன் ரெக்கார்டுகள் விற்பனையில் சாதித்தன.
தியாகராஜர் ஆபேரி ராகத்தில் அமைத்த, 'நகுமோமு' பாடலை, கர்நாடக தேவகாந்தாரி ராகத்தில் பாடி புகழ் பெற்றார். இவர் பாணியை, பெங்களூரு நாகரத்தினம்மா, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பின்பற்றினர். சென்னை மத்திய கர்நாடக இசை கல்லுாரி முதல்வராக இருந்த இவர், 1975, மார்ச் 25ல் தன், 76வது வயதில் மறைந்தார்.
'பத்ம பூஷன்' விருது பெற்ற சங்கீத கலாசிகாமணி பிறந்த தினம் இன்று!

