
மே 1, 1959
ராணிப்பேட்டை மாவட்டம், ஆரணிக்கு அருகில் உள்ள மேல்புதுப்பாக்கம் எனும் ஊரில், அண்ணாமலை - அலமேலு தம்பதியின் மகனாக, 1890 ஜனவரி 27ல் பிறந்தவர் முனுசாமி எனும் சுவாமி சகஜானந்தா.
இவர் துவக்க கல்வியை மேல்புதுப்பாக்கத்திலும், உயர்நிலை கல்வியை திண்டிவனத்திலும் படித்தார். பெற்றோருடன் கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் வேலை செய்தார். ஆன்மிக நாட்டத்தால், 17வது வயதில் துறவறம் பூண்டு ஊர் ஊராக திரிந்தார். வியாசர்பாடியில் கரபாத்திர சுவாமிகளின் குருகுலத்தில் சேவை செய்து, சுவாமி சகஜானந்தராக மாறினார்.
நாட்டுக்கோட்டை செட்டியார்களின் உதவியுடன் சிங்கப்பூர், மலேஷியா, பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சைவ சமய பிரசாரம் செய்தார். அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதி ஆகியவற்றை ஆதரித்தார். ஆலய பிரவேச சட்டம் நிறைவேற்றாததை எதிர்த்து போராடினார். சட்டசபை உறுப்பினராக, 34 ஆண்டுகள் செயல்பட்டு, தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை பெற்று தந்த இவர், 1959ல், தன் 69வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
சமத்துவ அரசியல்வாதியான ஆன்மிகவாதி மறைந்த தினம் இன்று!