
மே 13, 1956
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் வெங்கட்ரத்னம் அய்யர் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் ரவிசங்கர். இவர், ஞாயிற்றுக்கிழமை பிறந்ததாலும், ஆதிசங்கரர் பிறந்த தினத்தில் பிறந்ததாலும், சூரியனை குறிக்கும் வகையில் ரவிசங்கர் என பெற்றோர் பெயரிட்டனர்.
இவரும் சிறு வயதிலேயே பகவத் கீதை உள்ளிட்ட ஆன்மிக நுால்களை கற்றார். ஆழ்நிலை தியானத்தில் புலமை பெற்றார். இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்து, மகேஷ் யோகியின் சீடராகி, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்டவற்றுடன் வேதங்களையும் கற்பித்து புகழ் பெற்றார்.
சிதார் கலைஞர் ரவிசங்கர், தன் பெயரால் தான் இவருக்கு புகழ் என கூறியதால், தன் பெயருக்கு முன், ஸ்ரீஸ்ரீ என சேர்த்துக் கொண்டார். 'சுதர்சன கிரியா' எனும் மூச்சுப்பயிற்சியை கண்டு பிடித்து காப்புரிமை பெற்று, 'வாழும் கலை' அமைப்பின் வாயிலாக கற்பிக்கிறார். அயோத்தி ராமர் கோவில் கட்டும் பிரச்னையின் போது, பலதரப்பினருடன் அமைதி பேச்சு நடத்தினார்.
'பூஜ்ய ஸ்ரீ' எனும் ஆன்மிகவாதியின் 68வது பிறந்த தினம் இன்று!