
மே 24, 2016
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவில், ராமநாதர் வைத்திலிங்கம் - சிவகாமி பிள்ளை தம்பதியின் மகனாக, 1946, ஆகஸ்ட் 23ல் பிறந்தவர் ரா.வை.கனகரத்தினம்.
இவர், நெடுந்தீவு கோட்டைக்காடு மகேஸ்வரி வித்யாசாலை, சைவப்பிரகாச வித்யாசாலை, யாழ்ப்பாணம் முத்து தம்பி வித்யாசாலை, செங்குந்த ஹிந்து கல்லுாரி ஆகியவற்றில் படித்தார். 1968ல், கொழும்பு பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். இவர், 'சைவ நெறி பாடத்திட்டம், கல்லுாரி பாட நுால்கள்'உருவாக்கத்துக்கான ஆலோசகராக செயல்பட்டார்.
கடந்த 1975 - 80 வரை களனி பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார். 'நாவலர் உரைத்திறன், பண்டிதமணி சி.கணபதி பிள்ளையின் புலமையியல் -ஓர் ஆய்வு, நாவலர் ஆளுமையும் புலமைத்துவமும்' உள்ளிட்ட ஆய்வு நுால்களையும், நாட்டுப்புற இலக்கியம் குறித்த ஆய்வு நுால்களையும் எழுதினார்.
'சாகித்திய மண்டல விருது, சம்பந்தர் விருது' உட்பட பல விருதுகளை பெற்றவர், தன் 70வது வயதில், 2016ல், இதே நாளில் மறைந்தார்.
பன்முக வித்தகர் மறைந்த தினம் இன்று!