
மே 27, 1981
வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள கடப்பேரி எனும் ஊரில், ராகவன் - முனியம்மாள் தம்பதியின் மகனாக, 1903, ஏப்ரல் 15ல் பிறந்தவர் ஜமதக்னி.
இவர், சிறு வயதிலேயே புராண, இதிகாசங்களை கற்றார். வேலுார் ஊரிஸ் கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்து, பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் இலக்கியங்களை படித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சி அடைந்து, காங்கிரசில் சேர்ந்து, விடுதலைப் போரில் ஈடுபட்டார். உப்பு சத்தியாகிரகத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டார். வேலுார் கோட்டையில் கல் வீசியது, நீலன் சிலையை அகற்ற போராடியது உள்ளிட்டவற்றுக்காக சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்த போது, கம்யூனிஸ்ட் ஆனார். 'மூலதனம், மிகை மதிப்பு' நுால்களை மொழிபெயர்த்தார்.
சிறை மீண்டதும், சட்ட மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, மீண்டும் சிறை சென்றார். பல மாநில தலைவர்களுடன் பழகி, பல மொழிகளை கற்றார். காளிதாசரின், 'மேகசந்தேசம், ரகுவம்சம்' ஆகிய நுால்களை மொழிபெயர்த்தார். இவரின் பல நுால்கள் பதிப்பிக்கப்படாத நிலையில், சில நுால்கள், அரசின் பரிசை பெற்றுள்ளன. இவர் தன், 78வது வயதில், 1981ல் இதே நாளில் மறைந்தார்.
இலக்கியவாதியும், தேசியவாதியுமான, க.ரா.ஜமதக்னி மறைந்த தினம் இன்று!

