
ஜூன் 30, 1931
சென்னையில், துரைசாமி - செல்லம்மா தம்பதியின் மகனாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் சடகோபன். இவர், செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். அதே பள்ளியில், இவரது தந்தையும் ஆசிரியராக இருந்தார். அவரிடம் படித்தவர் ஸ்ரீதர். இருவரும் நாடகங்களை எழுதி இயக்கினர்.
அழகப்பா செட்டியார் கல்லுாரியில் படித்த சடகோபன், ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்ற, ஸ்ரீதர் திரைப்பட இயக்குனரானார். பின், சடகோபனையும் ஸ்ரீதர் தன்னுடன் அழைத்துக்கொண்டார். ஸ்ரீதர் உருவாக்கிய, 'சித்ராலயா' நிறுவனம் தயாரித்த, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில், 'சித்ராலயா கோபு'வாக மாறினார்.
தொடர்ந்து, 'காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், வீட்டுக்கு வீடு' உள்ளிட்ட படங்களுக்கு கதை,வசனம் எழுதிய கோபு, 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தில் இயக்குனரானார். 69 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியும், 27 படங்களை இயக்கியும் உள்ளார்.
இவர் எழுதிய கடைசி படம், பாட்டி சொல்லை தட்டாதே. 'மன்னார் அண்டு கம்பெனி, ஓஹோ புரொடக் ஷன்ஸ்'சின் உரிமையாளரான நகைச்சுவை எழுத்தாளரின் 93வது பிறந்த தினம் இன்று!

