
செப்., 2, 2023
சென்னையில், திரைப்பட தயாரிப்பாளர், எம்.ஆர்.சந்தானம் - ராஜலட்சுமி தம்பதியின் மகனாக, 1956, அக்டோபர் 26ல் பிறந்தவர், ஆர்.எஸ்.சிவாஜி.
சென்னையில் படித்த இவர், பன்னீர் புஷ்பங்கள் படத்தில், துணை நடிகராக அறிமுகமானார். அபூர்வ சகோதரர்கள் படத்தில், போலீசாக நடித்த ஜனகராஜ் எதைச் சொன்னாலும், 'எங்கேயோ போயிட்டீங்க சார்...' என்ற வசனம் பேசி பிரபலமானார். தொடர்ந்து, கமலின், குணா, பம்மல் கே.சம்பந்தம், மைக்கேல் மதன காமராஜன், கலைஞன், மகளிர் மட்டும், அன்பே சிவம், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர், உதவி இயக்குனராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.
பூவே உனக்காக, குட்டி, என் மன வானில், வில்லன், ஆய்த எழுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து பாராட்டு பெற்றார். அடுத்த தலைமுறையினருடன், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாகவும், கார்கி படத்தில் முக்கிய பாத்திரத்திலும் இவர் நடித்தது பாராட்டை பெற்றது. யோகிபாபுவுடன் இவர் நடித்த, லக்கி மேன் படம் வெளியாகி, பாராட்டை பெற்ற மறுநாள், தன், 66வது வயதில், 2023 இதே நாளில் மறைந்தார்.
இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் மறைந்த தினம் இன்று!