ADDED : மே 30, 2024 11:26 PM
சென்னை:வரும் கல்வியாண்டில் இருந்து, 20,000 அரசு பள்ளிகளில், 'ஆன்லைன்' மற்றும் வீடியோ வழி பாடங்கள் கற்பிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 8,160 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் 519.73 கோடி ரூபாய் செலவிலும், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் 455.32 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப்பட உள்ளன. இதனால், 46.12 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்காக, இணைய வசதி ஏற்படுத்தும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகின்றன. இதுவரை, 5,913 உயர், மேல்நிலை பள்ளிகளிலும், 3,799 நடுநிலை பள்ளிகளிலும், 10,620 தொடக்க பள்ளிகளிலும் இணைய வசதி இணைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இன்னும், 17,221 பள்ளிகளில், இணைய இணைப்பு வழங்கும் பணி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் முடிவடையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணைய வசதி பெற்ற பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் இருந்து, மாணவர்களுக்கு கரும்பலகை கற்பித்தல் மட்டுமின்றி, ஆன்லைன் வழி பாடமும் கற்பிக்கப்பட உள்ளது.
பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, இணையவழியிலும், ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாகவும் பாடங்களை நடத்த, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.