ADDED : மே 10, 2024 06:08 AM

எழும்பூர்: சென்னை, புதுப்பேட்டை, நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத், 33. இவர், எழும்பூரில் உள்ள 'டிராவல்ஸ்' நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீவிர ரஜினி ரசிகரான கோபிநாத், தன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ரஜினி பாடலுக்கு அவரை போலவே நடனமாடி பதிவிட்டு, அப்பகுதி வாசிகளிடையே பிரபலமானார்.
இவர், நேற்று காலை 'நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன்' என, மொபைல் போனில் 'வாட்ஸாப் - ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கோபிநாத்தின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்; அவர் போன் எடுக்கவில்லை.
சந்தேகமடைந்து அவரது தந்தை மணிக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. நண்பர்களும் அங்கு விரைந்தனர். கோபிநாத் தங்கியுள்ள அறைக்கு சென்று பார்த்தபோது, கோபிநாத் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
எழும்பூர் போலீசார் உடலை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுப்பி போலீசார் விசாரித்தனர்.
இதில், கோபிநாத் 'குயிக் கேஷ் ஆப்' எனும் 'ஆன்லைன்' கடன் செயலி வாயிலாக 50,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி செலுத்தியதாக தெரிகிறது. ஆனாலும், கடன் அளித்த நபர்கள் வட்டி கேட்டு, அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 'வாட்ஸாப்'பில் பகிர்ந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல், தற்கொலை செய்தது தெரிந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.