ADDED : ஆக 15, 2024 12:16 AM
சென்னை:தமிழகத்தில் 29 மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள, 75 மரகத பூஞ்சோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
திருப்பத்துார் வனச்சரகத்தில், நாகலுாத்து காப்புக்காட்டில் அமைந்துள்ள ஏலகிரி மலைகளில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலாத் தலம்.
இந்த அருவியில், 3.57 கோடி ரூபாய் செலவில், சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில், அரசு நிலங்களில், 75 மரகத பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுஉள்ளன. இவற்றில் 46,875 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை காசிமேட்டில் 22.42 லட்சம் ரூபாய் செலவில், பயன்பாடற்ற மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சேகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகள், மதிப்புமிக்க வளங்களாக மாற்றப்படும்
மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் 1.50 கோடி ரூபாய் செலவில், இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வழியாக, தொழிற்சாலைகளில் இருந்து அபாயகரமான மருந்துக் கழிவுகள் போன்றவற்றை எடுத்து செல்லும் வாகனங்களின் இயக்கம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.
ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகம் சார்பில், 32.99 கோடி ரூபாய் செலவில், 16 விடுதிகள்; 15.34 கோடி ரூபாய் செலவில், 14 பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 20 மாவட்டங்களில், 32.36 கோடி ரூபாய் செலவில், 28 ஆதிதிராவிடர் நல சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார்.