ADDED : ஜூலை 18, 2024 07:36 PM
மதுரை:ரயில்களில் பயணிக்க முன்பதிவு இல்லாத டிக்கெட்கள், ரயில்வே ஸ்டேஷன், தானியங்கி இயந்திரங்கள், அலைபேசி, செயலிகள் மூலம் வழங்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்க இதுவரை ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். தற்போது பொதுமக்களும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் விற்க ரயில்வே நிர்வாகம் வாய்ப்பு அளித்துள்ளது.
விற்கப்பட்ட மொத்த டிக்கெட் கட்டணத்தில் மூன்று சதவீதம் கமிஷனாக வழங்கப்படும். பணி காலம் ஓராண்டு. மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார், துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், போடிநாயக்கனுார், புனலுார் உட்பட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் ஏற்கனவே இம்முறையில் டிக்கெட் விற்கப்படுகிறது.
தற்போது திண்டுக்கல், பழநி, காரைக்குடி, புனலுார், பரமக்குடி, மானாமதுரை, தென்காசி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, திருநெல்வேலி, செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்களில் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் விற்க பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://sr.indianrailways.gov.in/என்ற இணையதளத்தை காணலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய ஆக.,5 கடைசி நாள்.