சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த எதிர்ப்பு
சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த எதிர்ப்பு
ADDED : மார் 02, 2025 01:41 AM

சென்னை: சுற்றுலா மற்றும் பள்ளிகளுக்கு சொந்த வாகனங்களை, வணிக ரீதியாக வாடகைக்கு இயக்குவதாக, புகார் எழுந்துள்ளது.
சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்கள், 'டூரிஸ்ட் பர்மிட்' பெறாமல், பல்வேறு செயலிகள் வாயிலாக சுற்றுலாவுக்கும், படப்பிடிப்புக்கும், ஆன்மிக தலங்களுக்கும் வாடகை அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
தற்போது, பள்ளி பொதுத்தேர்வு பணிகளுக்கும், சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலர் ஜாஹிர் ஹூசைன் கூறியதாவது:
பள்ளி கல்வி துறையில், பொது தேர்வுகளுக்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல, முறைகேடாக சொந்த வாகனங்களை, பலர் வணிக ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உள்துறை செயலர், போக்குவரத்து மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலருக்கு புகார் அளித்துள்ளோம்.
ஏற்கனவே, அரசு பணிகளுக்கு சொந்த பயன்பாட்டு கார்கள் இயக்கப்படுவதை, நாங்கள் சுட்டிக்காட்டி இருந்தோம். குறிப்பாக, 2024 லோக்சபா தேர்தலில் கூட சொந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதை, ஓட்டுநர் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிய பின், வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டன.
தற்போது, பள்ளிக்கல்வி துறையில் இதே பிரச்னை தொடர்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.