ADDED : பிப் 22, 2025 05:33 AM

மதுரை: தமிழகத்தில் பால் ஊக்கத்தொகையை உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ஆவின் வழங்கும் நடைமுறைக்கு பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து மதுரையில் பிப்.,24 ல் பால் நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை உட்பட மாநில அளவில் 27 பால் ஒன்றியங்கள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாள் தோறும் ஆவினுக்கு பால் வழங்கின்றனர். அவர்கள் பால் வழங்கியதற்கான தொகை சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தற்போது நடைமுறையில் உள்ளது. இதுபோல் தான் அரசு அறிவித்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையும் பட்டுவாடா செய்யப்பட்டது.
இந்தாண்டு ஜனவரி முதல் ஊக்கத்தொகையை மட்டும் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. மதுரை உட்பட லாபம் ஈட்டும் ஆவின் ஒன்றியங்களில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்கு பால் உற்பத்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மதுரையில் இதை கண்டித்து பிப்.,24ல் பால் நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பிப்.24ல் போராட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர், உற்பத்தியாளர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பெரியகருப்பன், உக்கிரபாண்டி, வெண்மணி சந்திரன், முத்துப்பாண்டி கூறியதாவது: இந்த புதிய நடைமுறையால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து செயலற்று போகும்.
தற்போது மதுரையில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சங்க தலைவர்கள் பங்கேற்றோம். ஆனால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதை கண்டித்து பிப்., 24 ல் ஆவினுக்கு பால் நிறுத்தப்போராட்டம் நடத்தவும், பிப்., 25 ல் ரோட்டில் பாலை கொட்டும் போராட்டமும் நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் மதுரையில் 80 ஆயிரம் லிட்டர் பால் ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.
சங்கங்கள் குறைத்து வழங்குவதாக புகார்
ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: உற்பத்தியாளர்களுக்கான பால் ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பாலுக்கான தொகை பல மாவட்டங்களில் ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்ததை விட சங்கங்கள் குறைத்து வழங்குவதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் சங்கங்களுக்கு எதிராக செயல்பட முடியவில்லை.
இதுபோன்ற புகார்கள் அடிப்படையில் தான் தமிழகம் முழுவதும் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கே வரவு வைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
உறுப்பினர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆவின் நிர்வாகம் வேண்டுகோளுக்கு ஏற்ப ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரத்தை ஆவினுக்கு வழங்கி வருகின்றனர் என்றனர்.