'திருப்பதி பல்கலை படிப்பு குறித்த உத்தரவை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது'
'திருப்பதி பல்கலை படிப்பு குறித்த உத்தரவை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது'
ADDED : ஆக 27, 2024 06:29 AM
சென்னை: 'திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலை வழங்கும் பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு, தமிழகத்தில் உள்ள பி.எஸ்.சி., இயற்பியல் படிப்புக்கு இணையானது அல்ல என்ற உயர் கல்வித்துறையின் உத்தரவை, முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து, ரம்யா என்ற மாணவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:
திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலையில், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் பாடங்கள் அடங்கிய, பி.எஸ்.சி., அறிவியல் படிப்பை, 2012ல் முடித்தேன். பின், பி.எட்., படித்தேன். சென்னை பல்கலையில், எம்.எஸ்.சி., இயற்பியலில் தேர்ச்சி பெற்றேன். வெங்கடேஸ்வரா பல்கலையில் படித்த பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு, சென்னை பல்கலை வழங்கும் படிப்புக்கு இணையானது என்பதற்கான சான்றிதழை, அப்போது சென்னை பல்கலை வழங்கியது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நேர்முகத் தேர்வுக்கு என்னை அழைத்த போது, என் கல்வித்தகுதி பற்றி, தேர்வு வாரியம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 2022 நவம்பரில் உயர் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில், 'வெங்கடேஸ்வரா பல்கலை வழங்கும் பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு, தமிழகத்தில் வழங்கப்படும் பி.எஸ்.சி., இயற்பியல் படிப்புக்கு இணையானது அல்ல; அரசு வேலைக்கு இதை பயன்படுத்த முடியாது' என்று கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோதமானது
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் கல்வித்துறையின் உத்தரவு சட்டவிரோதமானது; அதை ரத்து செய்ய வேண்டும். அரசு வேலைக்கு நான் பெற்ற பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு தகுதி பெற்றது தான் என, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர், “வெங்கடேஸ்வரா பல்கலையில் பெற்ற பி.எஸ்.சி., படிப்பை பரிசீலித்தே, சென்னை பல்கலையில் எம்.எஸ்.சி., படிப்பில் சேர அனுமதி வழங்கப்பட்டது. 2022ல் நிபுணர் குழு அளித்த முடிவை, மனுதாரருக்கு எதிராக பயன்படுத்த முடியாது,” என்றார்.
இந்த வழக்கில் முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலை வழங்கும் பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு குறித்து, சென்னை பல்கலை ஏற்கனவே சான்றிதழ் வழங்கிய நிலையில், இத்தனை ஆண்டுகளுக்கு பின், நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலான உத்தரவை முன் தேதியிட்டு அமல்படுத்தி, அதை செல்லாததாக்க முடியாது.
உயர் கல்வித்துறை உத்தரவை, வரும் காலத்தில் மட்டுமே அமல்படுத்த முடியும். நிபுணர்கள் குழு தெரிவித்த கருத்து சரியானதா, இல்லையா என்பதை, இந்த நீதிமன்றமும் ஆராயவில்லை. அதேநேரத்தில், நிபுணர்களின் கருத்து அடிப்படையில், உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை, மனுதாரருக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது.
உத்தரவு ரத்து
சென்னை பல்கலையும், மனுதாரருக்கு சாதகமாக சான்றிதழ் வழங்கி, அதன் அடிப்படையில் வேலைக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
எனவே, உயர் கல்வித்துறையின் உத்தரவை வேண்டுமானால், வருங்காலத்தில் அமல்படுத்திக் கொள்ளலாம்; முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது.
வெங்கடேஸ்வரா பல்கலையில் பெற்ற பி.எஸ்.சி., அறிவியல் படிப்பு, பி.எஸ்.சி., இயற்பியல் படிப்புக்கு இணையானது அல்ல என்ற உத்தரவு, மனுதாரரைப் பொறுத்தவரை ரத்து செய்யப்படுகிறது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.