245 சிவில் நீதிபதிகள் நியமனம் ஜூலை 10க்குள் முடிக்க உத்தரவு
245 சிவில் நீதிபதிகள் நியமனம் ஜூலை 10க்குள் முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 27, 2024 02:01 AM
சென்னை:காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான நியமன உத்தரவை, ஜூலை 10க்குள் பிறப்பிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பதவிகளை நிரப்புவதற்காக, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி 16ம் தேதி, தற்காலிக தேர்வு பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
இட ஒதுக்கீடு
இந்த தேர்வு பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனுவில், 'அதிக மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப் பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீடு பிரிவில் சேர்த்துள்ளனர். இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது' என கூறப்பட்டது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பொதுப் பிரிவிலும், இட ஒதுக்கீடு பிரிவிலும் தவறாக சேர்த்துள்ளதால், பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை உடனடியாக ரத்து செய்ய தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.
மெரிட் பட்டியலில் முன்னணியில் வந்தவர்களை, பொதுப் பிரிவில் சேர்த்தும், பின்னடைவு காலியிடங்கள் மற்றும் தற்போதைய காலியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி சேர்த்தும், திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை தயார் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஏற்கனவே இடம் பெற்றிருந்த 14 பேரை நீக்கி, புதிதாக 14 பேரை சேர்த்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேர்வு பட்டியல் கடந்த மார்ச் மாதம் அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மேலும் தாமதம் செய்யாமல், நியமன உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.
ஒப்புதல்
அதைத்தொடர்ந்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நியமன நடைமுறைகள் துவங்கி உள்ளதாகவும், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணையை ஜூலை 10க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் நியமன உத்தரவை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த நியமன உத்தரவுகள், நிலுவையில் உள்ள வழக்கின் முடிவை பொறுத்து அமையும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.