ADDED : ஆக 27, 2024 06:28 AM
சென்னை: இழுவை கட்டணம் தராததால், தனியார் சரக்கு கப்பலை முடக்கி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த, 'ஆதித்யா மரைன்' நிறுவனம் தாக்கல் செய்த மனு:
கடலில் தரை தட்டும் கப்பல், பழுதாகி நிற்கும் கப்பல்களை இழுத்து செல்லும் பணியை செய்து வருகிறோம்.
காரைக்கால் துறைமுகத்தில் பழுதாகி நின்ற, 'டால்பின் நம்பர் -1' என்ற கப்பலை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு இழுத்து செல்ல, எங்களை அந்த கப்பல் நிறுவனம் அணுகியது. இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, எங்கள் இழுவை கப்பல் காரைக்கால் சென்றபோது, டால்பின் நம்பர் -1 கப்பல் இழுத்து செல்ல முடியாத நிலையில் இருந்தது. பழுதடைந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக காரைக்காலில் அது நிறுத்தப்பட்டிருந்தது.
அதை அங்கிருந்து இழுத்து செல்ல, சென்னை வணிக கப்பல் துறை அனுமதி மறுத்ததும் தெரியவந்தது.
தற்போது, அங்கிருந்து இழுத்து செல்ல அனுமதி கிடைக்க உள்ளதாக கடந்த 8ம் தேதி எங்களுக்கு தகவல் வந்தது. டால்பின் கப்பல் அங்கிருந்து சென்று விட்டால், எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையான, 35 லட்சத்து 71,342 ரூபாய் கிடைக்காமல் போய் விடும்.
எனவே, டால்பின் நம்பர் -1 கப்பலை முடக்கிவைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ''டால்பின் கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து செல்லும் ஒப்பந்தத்தின்படி, அந்த நிறுவனம் 35 லட்சம் ரூபாயை தரவில்லை,'' என்றார்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் உள்ளதால், டால்பின் நம்பர் 1 கப்பலை முடக்கி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, டால்பின் கப்பல் நிறுவனம் செப்., 2க்குள் பதிலளிக்க வேண்டும் என கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.