தமிழகத்திற்கு 45.9 டி.எம்.சி., நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு
தமிழகத்திற்கு 45.9 டி.எம்.சி., நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 06:39 AM

சென்னை : தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம், 45.9 டி.எம்.சி., நீர் திறக்க, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் தயாளகுமார் ஆகியோர் பங்கேற்றனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக நீர் திறக்கப்பட்டு வருவதாக, கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய தமிழக பிரதிநிதி தயாளகுமார், ''கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தமிழகத்தின் உரிமை நீரை கேட்கிறோம். எனவே, உபரிநீரை கணக்கில் கொள்ளாமல், ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை வழங்க வேண்டும்,'' என்று, வலியுறுத்தினார். அதையேற்று, தமிழகத்திற்கு ஆகஸ்டில், 45.9 டி.எம்.சி., நீரை திறக்க, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தலைவர் வினீத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.