திருச்செந்துார் கோயிலைச் சுற்றி உள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற உத்தரவு
திருச்செந்துார் கோயிலைச் சுற்றி உள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற உத்தரவு
ADDED : செப் 12, 2024 04:13 AM

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் கோயிலைச் சுற்றிலும் உள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை அளவீடு செய்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் செந்தில் ராஜேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ., சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்குமேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. இது கடற்கரை மேலாண்மை திட்டம் மற்றும் ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி வரையறுக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அவற்றை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு: அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அங்கீகாரமற்ற கட்டுமானங்களை விரைவில் அகற்ற தேவையான நடவடிக்கையை திருச்செந்துார் நகராட்சி கமிஷனர் 4 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். அங்கீகாரமற்ற மற்றும் விதிமீறல் கட்டடங்களை தடுக்க கலெக்டர்கள் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து மார்ச்1 ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
துாத்துக்குடி கலெக்டர் தலைமையிலான உயர்நிலை கண்காணிப்புக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி, திருச்செந்துார் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.
இந்நீதிமன்றம், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்நீதிமன்றம் தயங்காது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டடங்களின் உண்மையான உயரத்தை அளவீடு செய்வதற்கு 'ட்ரோன்'களை (ஆளில்லா விமானங்களை) பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறையின் உதவியை நகராட்சி நிர்வாகம் பெறலாம்.
இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் 2025 ஜன.,2 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.