உறுப்பு தானம் செய்வோர் தேவைகள் பூர்த்தியாவதை உறுதி செய்ய வேண்டும்: அரசு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
உறுப்பு தானம் செய்வோர் தேவைகள் பூர்த்தியாவதை உறுதி செய்ய வேண்டும்: அரசு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 01, 2024 03:42 AM
சென்னை : 'உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் தேவைகள் பூர்த்தியாவதை உறுதி செய்யும் பொறுப்பு, சிகிச்சைக்கு அனுமதி அளிக்கும் அரசு குழுவுக்கு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சை பெறுபவர்கள், தங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அரசு குழு ஒப்புதல் அளிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
உறவினர் அல்ல
மனுக்களில், 'சிறுநீரகம் தானம் செய்ய ஒப்புதல் அளித்திருப்பவர்கள், எங்களின் உறவினர்கள் அல்ல. மருத்துவமனை தரப்பில் குழுவுக்கு ஆவணங்கள் அனுப்ப தயக்கம் காட்டப்படுகிறது' என்று கூறப்பட்டு உள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
சிறுநீரக மாற்று சிகிச்சை, உயிருடன் இருப்பவர்கள் தானம் அளிப்பதன் வாயிலாக பெரும்பாலும் நடக்கிறது. நெருங்கிய உறவினராக இல்லாதவர்கள், சிறுநீரகம் தானம் செய்வதை சட்டம் தடுக்கவில்லை.
ஒரே கட்டுப்பாடு என்னவென்றால், மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒப்புதல் குழுவின் முன் அனுமதி பெற்ற பின்னரே, சிறுநீரக மாற்று சிகிச்சை நடத்த முடியும்.
விண்ணப்பத்தில் சிறுநீரகம் தானம் கொடுப்பவரும், அதை பெறுபவரும் சேர்ந்து கையெழுத்திட்டு, அரசு நியமித்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாகவோ, பதிவுத் தபாலிலோ அல்லது ஆன்லைன் வழியாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இது குறித்து, மாநில அரசு தான் வழிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்டவர்கள் எந்த வழியையும் தேர்ந்தெடுக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
மருத்துவமனையிடம் இருந்து தான் விண்ணப்பம் பெறுவோம் என, ஒப்புதல் குழு வலியுறுத்தக் கூடாது.
தானம் கொடுப்பவர், பெறுபவருக்கு இடையில், பணம் பரிவர்த்தனைக்கான உறுதியான ஆதாரம் இல்லையென்றால், அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்கவோ, நிராகரிக்கவோ கூடாது.
தடையில்லை
அன்பு, பாசத்தின் அடிப்படையில் தானம் செய்வதாக கூறினால், நம்பத்தகுந்த காரணங்கள் இல்லாமல் அதை சந்தேகிக்கக் கூடாது. இது குறித்து, உறுதியான வழிமுறைகளை அரசும் வகுக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் பிரச்னை, குழுவின் தன்னிச்சையான முடிவுக்கு சென்று விடும்.
அறுவை சிகிச்சைக்கு பின், தானம் கொடுத்தவரின் தேவைகளை கவனிக்க வேண்டிய கடமை, தானம் பெற்றவருக்கு உள்ளது. சட்டத்தில் இதற்கு எந்த தடையும் இல்லை.
விண்ணப்பங்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதோடு, அரசு குழுவின் செயல்பாடு நின்று விடக்கூடாது. தானம் கொடுத்தவரின் தேவைகள் பூர்த்தியானதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது.சிறுநீரக தானம் கொடுத்தவருக்கு, சத்தான உணவு வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவருக்கு உடல்நல பிரச்னைகள் எழலாம்.
தானம் கொடுத்தவருக்கு மருத்துவ காப்பீடு எடுப்பதோடு, குழுவின் கணக்கில் கணிசமான தொகையை டிபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். மாதந்தோறும் தானம் கொடுத்தவரின் வங்கிக் கணக்குக்கு, மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, அரசு குழுவுக்கு மனுதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நான்கு வாரங்களில், தகுதி அடிப்படையில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.