இந்திய இளைஞர்களின் திறமை பிற நாடுகளுக்கு தேவை: கவர்னர்
இந்திய இளைஞர்களின் திறமை பிற நாடுகளுக்கு தேவை: கவர்னர்
ADDED : மே 04, 2024 12:45 AM

சென்னை:பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின், 32வது பட்டமளிப்பு விழா, சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். இதில், எம்.பி.ஏ., படிப்பை முடித்த, 191 பேர் பட்ட சான்றிதழ்கள் பெற்றனர்.
நிகழ்ச்சியில், பாரதிதாசன் பல்கலையின் புதிய கட்டடத்தையும், கவர்னர் திறந்து வைத்தார். பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின், 40ம் ஆண்டு நினைவு மலரையும் வெளியிட்டார். பின், கவர்னர் பேசியதாவது:
இந்தியா தற்போது தன்னிறைவு பெற்ற நாடாக திகழப் போகிறது. அதற்கான வளர்ச்சியை பெற்று வருகிறது. 'டிஜிட்டல்' தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய இந்தியா உருவாகியுள்ளது. பொருளாதாரத்தில் சர்வதேச அளவில், 5வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
இந்தியாவுடன் வணிகம் செய்யவும், இங்கு முதலீடு செய்யவும், பல வெளிநாடுகள் தயாராக உள்ளன. சர்வதேச நாடுகளுடன் சிறந்த நட்புறவில் உள்ளோம். நாட்டில் அனைத்து மக்களுக்கும், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கின்றன. ஜாதி, மத பாகுபாடின்றி, அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்களின் திறமைகள், மற்ற நாடுகளுக்கு தேவைப்படுகின்றன. இந்தியாவுக்கு, இது பொற்காலமாக உள்ளது. எனவே, இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கவுரவ விருந்தினராக டி.வி.எஸ்., நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பங்கேற்றார். பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன நிர்வாக குழு தலைவர் ரவி அப்பாசாமி, இயக்குனர் அசித் கே.பர்மா பங்கேற்றனர்.