ADDED : மே 24, 2024 07:36 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் மாநகராட்சி உத்தரவில் இடியும் நிலையில் உள்ள 4 பழைய வீடுகளை அதன் உரிமையாளர்களே இடித்து அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல் நகரில் சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்குகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. இதனால் ஈரப்பதம் அதிகரித்து பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழைய வீடுகளின் சுவர்கள் ஆங்காங்கே இடியும் நிலை தொடர்ந்து நடக்கிறது.
இதனால் பெரியளவிலான உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படுதவற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் புகார் தெரிவித்தனர். கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகரமைப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நகர் முழுவதும் இடியும் நிலையில் உள்ள பழைய வீடுகளை இடிக்க உத்தரவிட்டு அதற்கான எச்சரிக்கை நோட்டிசும் சம்பந்தபட்ட வீடுகளின் சுவர்களில் ஓட்டினர். இதையடுத்து நேற்று திண்டுக்கல் தெற்கு ரதவீதி,வடக்கு காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பழைய,இடியும் நிலையிலிருந்த 4 வீடுகளை அதன் உரிமையாளர்கள் இடித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் அதை ஆய்வு செய்து இதேபோல் மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து ஆபத்தை ஏற்படுத்தும் பழைய நிலையில் பயன்பாடற்ற வீடுகளை அப்புறப்படுத்த முன் வர வேண்டும் என அறிவுறுத்தினர்.