ADDED : செப் 07, 2024 07:35 PM
சென்னை:'எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு, எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்ததாலேயே, பள்ளியில் பேச அனுமதித்துள்ளனர்' என, பழனிசாமி கூறி உள்ளார்.
முதல்வராக இருந்த அவரும் ஒரு வி.ஐ.பி.,தானே. வி.ஐ.பி.,யை பார்க்க நிறைய பேர் வருவர் என்பது, ஒரு அடிப்படை தியரி. அப்படி பார்க்க வருகிறவர்கள், ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்தா அனுமதிப்பர். இது கூட தெரியாமல் எப்படி முதல்வராக பொறுப்பு வகித்தார்; எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்?
தினமும் கையெழுத்தாகும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களின் பட்டியலை பார்த்து வயிற்றெரிச்சல் படும் பழனிசாமி, அதை திசை திருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு, எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தனது ஆட்சியில், தமிழகத்தை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய பழனிசாமிக்கு, யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.