தமிழக தொழில் நிறுவனங்கள் வெளியேறும் நிலையை தடுங்கள் அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
தமிழக தொழில் நிறுவனங்கள் வெளியேறும் நிலையை தடுங்கள் அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2024 01:00 AM
சென்னை:'தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்க தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு, டெக்ஸ்டைல் துறையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
அன்னிய முதலீடுகள் ஈர்ப்பில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியதில்தான், தி.மு.க., அரசு சாதனை புரிந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் 2020 - 21ல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், 2022 - 23ம் ஆண்டு 27.70 சதவீதமாகக் குறைந்து, எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினேன்; இதுவரை அரசு வெளியிடவில்லை.
எனது தலைமையிலான அரசு, திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரி மற்றும் ஓசூரில் 'செமிகண்டக்டர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்தது.
ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் கடந்த நிலையில், தி.மு.க., அரசு அதில் முனைப்பு காட்டாததால், செமி கண்டக்டர் தொழிற்சாலைகள், அசாம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு சென்று விட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் கடைசி வாரத்தில், மத்திய பிரதேச முதல்வர், கோவை மற்றும் திருப்பூர் வந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்கம், இந்திய பருத்தி கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதனால், உள் மாநில ஜவுளி முதலீடுகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலையை, தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஜவுளி கூட்டமைப்பு தன் விரிவாக்கப் பணிகளை, வெளி மாநிலங்களுக்கு மாற்ற, சில காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.
அதாவது, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தொழில் நிறுவனங்களுக்கு, மூன்று முறை மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 'பீக் ஹவர்' கட்டணம், நிலை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பருத்தி 365 கிலோ பேல் விலை, 50 சதவீதத்திற்குக் கீழ் குறைந்தபோதும், நுால் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவியபோதும், போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசு, இனியாவது விழித்து, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்க தேவையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை என்ற பெயரை, தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வகையில், டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.