பழனிசாமி 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்; முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் வாழ்த்து
பழனிசாமி 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்; முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் வாழ்த்து
ADDED : மே 13, 2024 03:33 AM

சேலம் : முன்னாள் முதல்வர் பழனிசாமி, 70வது பிறந்த நாளையொட்டி, முன்னாள் அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 70வது பிறந்த நாளை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் நேற்று கொண்டாடினார். சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சிக்கன் சாப்பாடு
நிர்வாகிகள், தொண்டர் கள் அளித்த, 70 கிலோ கொண்ட 15 கேக்குகளை பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ்சத்யன், இரு டிராக்டர், மாட்டு வண்டிகளில் பழங்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வீட்டுக்கு வந்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு, காலை முதல் மாலை வரை கேக், லட்டு வழங்கப்பட்டன.
மதிய சாப்பாடாக சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, தால்சா, பிரட் அல்வா வழங்கப்பட்டன. பழனி சாமி வீட்டின் அருகே சேலம் மாநகர அ.தி.மு.க.,வினர், தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர், பழங்களை வழங்கினர்.
குவிந்த தொண்டர்கள்
மதியம் 3:00 மணி வரை, தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள், பழனிசாமியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.- -முன்னதாக அவருக்கு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சண்முகம், முனுசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர்களான உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.