சிவில் பிரச்னையில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து: உயர்நீதிமன்றம் அதிருப்தி
சிவில் பிரச்னையில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து: உயர்நீதிமன்றம் அதிருப்தி
ADDED : மே 01, 2024 08:14 AM
மதுரை : 'சிவில் விவகாரங்களைக் கையாள போலீசாருக்கு அதிகாரம் இல்லை. அப்படியிருந்தும் இதுபோன்ற புகார்கள் போலீசாரால் ஏற்கப்பட்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.
மதுரை வழக்கறிஞர் பாலமுருகன். இவரது தந்தை பால்ராஜ். ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., இவரது இரண்டாவது மனைவி ராமுத்தாய். இவரது மகன் நடராஜன். பொறியாளர். மதுரை, சென்னையில் தனது பெயரில் சொத்துக்களை வாங்க பாலமுருகனின் வங்கி கணக்கிற்கு ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 மாற்றினார். உறுதியளித்ததற்கு மாறாக பாலமுருகன் பெயரில் சொத்துக்களை வாங்கியதாகவும், ராமுத்தாயை மிரட்டி நகைகளை எடுத்துச் சென்றதாகவும் மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர். பின் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கைதான பாலமுருகன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி: இது சிவில் பிரச்னை. சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே தீர்வு காண முடியும். நடராஜன் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்க அவர் தனது தாயாருக்கு அதிகாரம் அளித்ததாகத் தெரியவில்லை. தொகை நடராஜனின் கணக்கிலிருந்து எப்போது மனுதாரருக்கு மாற்றப்பட்டது என்பதற்கு அரசு அல்லது புகார்தாரர் சார்பில் பதிலளிக்க முடியவில்லை. அவர்கள் கூறியதுபோல் 2004 முதல் 2020 வரை சில பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இச்சூழலில் 2024 ல் ஏன் புகார் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.
கைப்பாவையாக
நகையை எடுத்துச் சென்றது 2023 ஜூலை 25 ல் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்து மாதங்களுக்குப் பின் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டியில் நடந்துள்ளது. அதே எல்லைக்குட்பட்ட போலீசில் ஏன் புகார் அளிக்கவில்லை என்பது தெரியவில்லை.
சில உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் கைப்பாவையாக செயல்பட்டுள்ளனர். சொத்து பிரச்னைக்கு கிரிமினல் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் முதலில் மத்திய குற்றப்பிரிவுக்கு இதை அனுப்பியுள்ளார். பின் அதை மாற்றியமைத்து தல்லாகுளம் போலீசுக்கு அனுப்பினார். அங்கிருந்து அதே கமிஷனர், ஒரு மாதத்திற்கு பின் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பியுள்ளார். குற்றப்பிரிவு போலீசார் விரைவாக செயல்பட்டு மனுதாரரை கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்ததில் எதையும் போலீசார் சாதிக்கவில்லை. எந்த ஆவணத்தையும் சேகரிக்கவில்லை.
காவல்துறையின் கண்ணியம்
சிவில் விவகாரங்களைக் கையாள போலீசாருக்கு அதிகாரம் இல்லை. சிவில் விவகாரங்களை கையாள ஒரு நீதிமன்றம் உள்ளது. சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடுவதை காவல்துறை நிலையாணை தடை செய்கிறது. அப்படியிருந்தும், இதுபோன்ற புகார்கள் போலீசாரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர்.
பணம், நிலம், சொத்து, பாதை தகராறு போன்ற சிவில் விவகாரம், அறிவுசார் சொத்துரிமை தகராறுகளை போலீசார் விசாரிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜன.,9 சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதை போலீஸ் கமிஷனர் பொருட்படுத்தவில்லை என தெரிகிறது. இப்பிரச்னையை டி.ஜி.பி., ஆய்வு செய்து, காவல்துறையின் கண்ணியம், 'இமேஜை' பாதுகாக்க வேண்டும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. வழக்கின் சூழ்நிலை கருதி மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.