பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராமம்தோறும் விழிப்புணர்வு கூட்டம்
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் கிராமம்தோறும் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 08, 2024 02:24 AM

திருப்பூர்:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் ஆண்டு முழுதும் நீர் பெற வேண்டுமானால், பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து, பாண்டியாறு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., 1984ல் முதல்வராக இருந்தபோது, பாண்டியாறு - மாயாறு திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டினார்.
கால்கோள் விழா நடத்தும் அளவுக்கு ஏற்பாடு தீவிரமானது. நிலம் எடுப்பு பணிக்காக புளியம்பட்டி - நம்பியூர் சாலையில் உள்ள குட்டகம் பகுதியில் கல் நடப்பட்டது. திட்டம் நிறைவேறும் முன், பாசன சபைகளை ஏற்படுத்தவும், அப்போதைய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், பல்லடம், சூலுார், அவிநாசி பகுதிகளுக்கும் இத்திட்டத்தின் வாயிலாக தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது தொடர்பான ஆலோசனையை அரசு மேற்கொண்டது.
பாண்டியாறு - புன்னம்புழா நீர் பங்கீட்டில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு, தலா, 7 டி.எம்.சி., நீர் என்ற அடிப்படையில் கேரளாவுக்கு வழங்கும், 7 டி.எம்.சி., நீரையும் நாமே பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக கேரளாவுக்கு மின்சாரம் வழங்குவது என்ற யோசனையை அடிப்படையாக கொண்டு, கேரள அரசுடன் பேச்சு நடத்த தமிழக அரசு முனைப்பு காட்டியது; கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தமிழக மூத்த பொறியாளர் சங்க செயலர் வீரப்பன் தலைமையிலான குழுவினர், இத்திட்டம் தொடர்பாக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை வழங்கியுள்ளனர்.
இந்த இணைப்பு வாயிலாக, பவானிசாகர் அணைக்கு, 3 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும். இது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் பெறப்படும், 1.5 டி.எம்.சி.,நீரை விட இரு மடங்கு அதிகம்; ஆனால், அதற்காகும் செலவு, அத்திக்கடவு திட்ட மதிப்பீட்டில், 10ல் ஒரு மடங்கு மட்டும் தான்.
திட்டத்தை நிறைவேற்ற, கேரள அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்ற நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது எளிது.
திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க, கிராமம் தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். அக்., 2ல் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.