தாலுகா அலுவலகத்தில் பரிகார பூஜை கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
தாலுகா அலுவலகத்தில் பரிகார பூஜை கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
ADDED : செப் 05, 2024 05:07 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக ஊழியர்களுக்கு ஏற்பட்டு வரும் தொடர் சிக்கலை தவிர்க்க வேண்டி நேற்று பரிகார பூஜை நடத்தப்பட்டது.
திருக்கோவிலுார் தாலுகாவை சேர்ந்த கண்டாச்சிபுரம் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ., தனி தாலுகாவாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அருகே தாலுக அலுவலகம் கட்டப்பட்டது.
இந்த தாலுகா அலுவலகத்திற்கு பணி மாறுதலாகி வந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வந்தனர். அதன்படி, தாசில்தார் பழனி முறைகேடு தொடர்பாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின்னர் பணிக்கு வந்த தாசில்தார் கார்த்திகேயன் கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. துணை தாசில்தார் ஒருவருக்கும், அரசியல் கட்சி பிரமுகருக்கும் கைகலப்பு ஏற்பட்டு பெரும் சிக்கலை உருவாக்கியது.
தொடர்ந்து 2 ஆண்டிற்கு முன் சர்வேயர் ரகோத்தமன் லஞ்ச வழக்கில் கைதானார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி சர்வேயர் ராமமூர்த்தி விவசாயியிடம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக சிக்கி, கைதானார்.
தாலுகா அலுவலகம் கட்டிய நேரம் சரியில்லாததால் தான், ஊழியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சிக்கில் ஏற்பட்டு வருவதாக ஊழியர்கள் கருதினர்.
அதனையொட்டி, திருஷ்டி பரிகாரம் செய்வதற்காக நேற்று காலை தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதில், அலுவலக ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று, பரிகாரம் செய்து கொண்டுள்ளனர்.