ADDED : செப் 01, 2024 12:57 AM

சென்னை: விழுப்புரம் உட்பட ஐந்து ரயில் நிலையங்களின் வளாகங்களில் பசுமை பூங்கா, புல் தரை, செடிகள் அமைக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, சூரியசக்தி மின் உற்பத்தி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து, வணிக பயன்பாடு மற்றும் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சிறிய பசுமை பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 30 ரயில் நிலையங்களில் பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம், அரியலுார், திருவண்ணாமலை, போளூர், விருத்தாசலம் ரயில் நிலைய வளாகங்களில் பசுமை பூங்கா அமைக்க, டெண்டர் வெளியிட்டுள்ளோம். நிறுவனங்களை தேர்வு செய்த அடுத்த மூன்று மாதங்களில் பணியை முடிக்க உள்ளோம்.