தமிழ் பெயர் பலகை வைக்காத அரசு ஆபீசுகளுக்கு அபராதம்
தமிழ் பெயர் பலகை வைக்காத அரசு ஆபீசுகளுக்கு அபராதம்
ADDED : ஜூலை 20, 2024 02:19 AM

சென்னை : 'தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, தமிழ் ஆட்சி மொழி சட்டம் வலியுறுத்துகிறது.
ஆனால், இந்த சட்டத்தை பெரும்பாலான தனியார் நிறுவனங்களும், வியாபாரிகளும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.