திமுக மீதான மக்கள் கோபத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இ.பி.எஸ்., பேட்டி
திமுக மீதான மக்கள் கோபத்தை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இ.பி.எஸ்., பேட்டி
UPDATED : ஜூலை 28, 2024 01:08 PM
ADDED : ஜூலை 28, 2024 12:06 PM

தூத்துக்குடி: 'தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்' என அ.தி.மு.க., பொச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் நாளுக்கு நாள் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல் மனிதர்களை வெட்டுவது அதிகரித்துள்ளது. இது தமிழகத்திற்கு நல்லது அல்ல. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது கவலை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைவை தடுக்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை 565 கொலைகள் நடந்துள்ளன.
பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவுகிறது. தி.மு.க., மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தங்கள் மீதான கோபத்தை மறைக்க மத்திய அரசு மீது தி.மு.க., குற்றம் சாட்டுகிறது. மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலும், பா.ஜ., ஆட்சியிலும் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இவ்வாறு இ.பி,எஸ்., கூறினார்.