'பஸ் பாஸ்' விண்ணப்ப முறைக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு
'பஸ் பாஸ்' விண்ணப்ப முறைக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 27, 2024 01:44 AM

சென்னை:அரசு பஸ்களில் இலவசமாக பயணிப்பதற்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிராக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்துக்கு முன், நேற்று 100க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க செயலர் ரூபன் முத்து கூறியதாவது:
பார்வையற்றோர் அரசு பஸ்களில் பயணிக்க, ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, பழைய பஸ் பாஸ், புகைப்படம் உள்ளிட்ட ஆவண நகல்களை, பிப்., இறுதியில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையரகத்தில் வழங்குவோம்; எங்களுக்கு, ஏப்ரலுக்குள் புதிய பஸ் பாஸ் கிடைப்பது வழக்கமாக இருந்தது.
தற்போது, பழைய நடைமுறைக்கு பதிலாக, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும்படி கூறுகின்றனர். இது, பார்வையற்றோருக்கு பெரிய சவாலாக உள்ளது.
இதற்காக இ - சேவை மையங்களை தேடிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ளோருக்கு, இந்த சேவைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், விண்ணப்பிப்பதை நிராகரிக்கின்றனர். இதனால், குறிப்பிட்ட கெடுவுக்குள் எங்களால் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.
அதற்கு பதிலாக, எங்களிடம் ஆவணங்களைப் பெற்று, சிறப்பு அலுவலரை நியமித்து, அவர்களே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எங்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
எங்களை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குனர் லட்சுமி அழைத்து பேசினார். அவர், 15 நாட்களுக்குள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்க, ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால், ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.