பெரியாறு அணை விவகாரம் சுற்றுச்சூழல் குழு கூட்டம் ரத்து
பெரியாறு அணை விவகாரம் சுற்றுச்சூழல் குழு கூட்டம் ரத்து
ADDED : மே 29, 2024 01:01 AM

சென்னை:முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது தொடர்பாக, கேரள மாநில அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நடக்க இருந்த, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில், தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த அணையை அகற்றி விட்டு, புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்தில், 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் கிடைக்காது. இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புதிய அணை கட்டுவதற்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம், கேரள அரசு ஜனவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு, இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இக்குழுவினர், டில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்த உள்ளதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்; விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில், நேற்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அதனால், தமிழக அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கி, தற்காலிக ஆறுதல் கிடைத்துள்ளது.