ADDED : ஜூலை 16, 2024 11:57 PM
சென்னை : அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு, ஊதிய உயர்வு கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில், 'பிசியோதெரபிஸ்டுகள்' என்ற இயன்முறை டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை டாக்டர்கள் சங்கத் தலைவர் எம்.கருணாநிதி கூறியதாவது:
ஒப்பந்த அடிப்படையில், பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு, ஆயுஷ் மற்றும் பல் டாக்டர்களுக்கு இணையாக மாதம், 35,000 ரூபாய் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய இயன்முறை டாக்டர்களுக்கு, அரசு பணியின்போது ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி மற்றும் ஆண்டுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு போன்ற பண பலன்களை வழங்க வேண்டும். அரசின் கவனத்தை பெறும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

