79 இடங்களில் 'ஹெலிபேட்' சுற்றுலாவுக்கு பயன்படுத்த திட்டம்
79 இடங்களில் 'ஹெலிபேட்' சுற்றுலாவுக்கு பயன்படுத்த திட்டம்
ADDED : மே 29, 2024 12:52 AM
சென்னை:காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களில் ஹெலிகாப்டர் சேவை உள்ளது. இதனால், சுற்றுலா பயண நேரம் குறைகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் விமான நிலையங்கள் உள்ளன.
நீலகிரியில் உள்ள ஊட்டி, திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கும்; ராமநாதபுரம், கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
அவர்கள் விமானத்தில் தமிழகம் வந்தாலும், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களுக்கு கார்களில் செல்கின்றனர். இதனால், பயண நேரம் அதிகரிக்கிறது.
எனவே, சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களை உள்ளடக்கி, குறைந்த கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை அறிமுகம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக, ஹெலிபேட் கண்டறிவது, ஹெலிகாப்டர் ஆப்பரேட்டர்களுக்கான வழிகாட்டுதலை, டிட்கோ எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஏற்படுத்த உள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஆண்டு இறுதியில், தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.
இதனிடையே, ஹெலிகாப்டர் தரையிறங்க தமிழகம் முழுதும், 79 ஹெலிபேட்கள் இருப்பதை, டிட்கோ அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, சென்னையில் விமான நிலையம், நேப்பியர் பாலம் அருகில் ஐ.என்.எஸ்., அடையாறு, சென்னை அடுத்த வல்லுார், சிறுசேரி மற்றும் காட்டுப்பள்ளி என, ஐந்து இடங்களில் ஹெலிபேடுகள் உள்ளன.
ராமநாதபுரத்தில் ஆறு இடங்களிலும்; திண்டுக்கல், நீலகிரி, சிவகங்கையில் நான்கு இடங்களிலும்; கன்னியாகுமரி, திருவண்ணாமலையில் இரு இடங்களிலும் ஹெலிபேடுகள் உள்ளன.
விமான நிலையம் இல்லாத தஞ்சை, தேனி, விழுப்புரம், ஈரோடு, நாகை என, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஹெலிபேடுகள் உள்ளன.
அவை, மத்திய அரசு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரி வளாகங்களில் உள்ளன. இவற்றை சுற்றுலாவுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.