கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி: விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம்
கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி: விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம்
ADDED : மே 28, 2024 05:14 AM

நாகர்கோவில் : லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்து பிரதமர் மோடி, வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார்.
கடந்த, 2019 தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். 2024 தேர்தல் பிரசாரம் வரும், 30ம் தேதி நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்து அன்றே கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், வரும், 30, 31, ஜூன் 1ல் தியானம் செய்கிறார்.
இது தொடர்பாக டில்லியில் இருந்து தகவல் வந்ததன் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று விவேகானந்தர் மண்டபம் சென்று ஆய்வு நடத்தினர். அத்துடன், கன்னியாகுமரியில் உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பிரதமருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் டில்லியில் இருந்து இன்று காலை கன்னியா குமரி வந்து, பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.