பணப்பட்டுவாடா புகாருக்கு பா.ம.க., வேட்பாளர் ஆதாரம்
பணப்பட்டுவாடா புகாருக்கு பா.ம.க., வேட்பாளர் ஆதாரம்
ADDED : ஏப் 30, 2024 11:11 PM
சென்னை:அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, வீடியோ ஆதாரங்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், அத்தொகுதி பா.ம.க., வேட்பாளர் பாலு புகார் மனு அளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அரக்கோணம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், 50 கோடி ரூபாய்க்கு மேல், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, 80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.
வாகனம் பறிமுதல்
இது தொடர்பான புகார் மனு மீது, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்.
இது தொடர்பாக, ஏற்கனவே 20க்கு மேற்பட்ட புகார் மனுக்களை, தேர்தல் நடத்தும் அலுவலர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்தும் நடவடிக்கை இல்லை.
தொகுதியில் உள்ள ஓச்சேரி பகுதியில் 20 லட்சம் ரூபாய், நான்கு வாகனம் பறிமுதல்செய்யப்பட்டது.
தேர்தல் அதிகாரி பூபாலன் வந்ததும், பணம், வாகனம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
தி.மு.க., மீது, 20 புகார் அளித்துள்ளேன். ஆனால், ஒரு வழக்கு கூட தி.மு.க., மீது பதிவு செய்யப்படவில்லை. கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தும் நடவடிக்கை இல்லை.
ஓட்டுப்பதிவு அன்று ஓட்டுச்சாவடியை கைப்பற்றிய புகார் மீதும், நடவடிக்கை எடுக்கவில்லை.
வருமான வரித்துறையினர், 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதன் மீது புகார் பதிவு செய்யப்படவில்லை.
தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட அமைச்சர் காந்தி, எம்.பி., ஜெகத்ரட்சகனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரை மாற்ற வேண்டும் எனப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
வீடியோ பதிவுகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில், தமிழகம் முன்னணியாக இருப்பதற்குரிய ஆதாரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளேன்.
இரண்டு வீடியோ பதிவுகளையும் கொடுத்துள்ளேன். தற்போது அளித்துள்ள புகார் மனு மீது, தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வேன்.
இவ்வாறு பாலு கூறினார்.