புரியாமல் பேசாதீங்க; பா.ம.க., காங்கிரஸ் நோக்கம் ஒன்றுதான்: சொல்கிறார் அன்புமணி
புரியாமல் பேசாதீங்க; பா.ம.க., காங்கிரஸ் நோக்கம் ஒன்றுதான்: சொல்கிறார் அன்புமணி
ADDED : பிப் 14, 2025 12:52 PM

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை;தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், இதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி சமூகநீதிக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இந்த கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., அரசு மறுத்து வருகிறது.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இடஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த முன்வரைவை அடுத்த மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது எதையுமே உணராத தி.மு.க., அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. பா.ம.க., மற்றும் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றனர், இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில், 'சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும் அன்புமணி, 4 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியருக்கு 10.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, எந்த அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டை வழங்குகிறீர்கள். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் கொடுங்கள் என்று இ.பி.எஸ்., இடம் கேட்டிருக்க வேண்டாமா?' என்று அன்புமணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தில் சமூக நீதியைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 45 ஆண்டுகளாக ராமதாஸ் பாடுபட்டு வரும் நிலையில், அதை அங்கீகரிக்காமல், சாதிவாரி கணக்கெடுப்புக்கான எனது கோரிக்கையை அரசியல் என்று நீங்கள் கொச்சைப்படுத்துவதற்கு புரிதல் இல்லாமை தான் காரணம்.
மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.,வின் நிலைப்பாடு. இந்தியா முழுவதும் காங்., ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் நிலைப்பாடும் இதுதான். ராகுலும் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்த விவகாரத்தில் பா.ம.க.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான ஒற்றுமையை புரிந்து கொண்டு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பா.ம.க.,வின் இந்த முயற்சிக்கு துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.