சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது போலீசில் புகார்
சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது போலீசில் புகார்
ADDED : மார் 01, 2025 01:51 AM
சென்னை: 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்திய முப்படை மற்றும் துணை ராணுவப்படை முன்னாள் வீரர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், பாதுகாவலராக வேலை பார்த்து வரும் அமல்ராஜ், இந்திய ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர். தன் கடமையை செய்தவரை, சென்னை நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் கடுமையாக தாக்கியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்ன போதும், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். துப்பாக்கியை எடுத்துக் கொடுக்க முயன்ற அமல்ராஜ் மீது, அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சட்ட ரீதியாக அனுமதி பெற்றே, அமல்ராஜ் துப்பாக்கி வைத்திருந்தார்.
பிரவீன் ராஜேஷ், இதற்கு முன் பணிபுரிந்த இடங்களிலும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். மனிதத் தன்மையற்று, அமல்ராஜின் கண்களைக் குத்தி, கொடூரமாக தாக்கிய பிரவீன் ராஜேஷ் மற்றும் அவருடன் இருந்த போலீசார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.