லேப்டாப், அலைபேசி தொடர்புகள் குறித்து சவுக்கு சங்கரிடம் போலீஸ் விசாரணை
லேப்டாப், அலைபேசி தொடர்புகள் குறித்து சவுக்கு சங்கரிடம் போலீஸ் விசாரணை
ADDED : மே 22, 2024 04:22 AM

தேனி: போலீஸ் காவலில் உள்ள யு டியூபர் சவுக்கு சங்கரிடம் லேப்டாப், அலைபேசி தொடர்புகள் குறித்து பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதுாறு பேசியதாக மே 4ல் தேனியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சங்கர் பயன்படுத்திய காரில் 409 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கர், உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது வழக்கு பதிந்தனர். மூவரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த பரமக்குடி அருகே ஆரக்குடியை சேர்ந்த மகேந்திரன் 2.600 கிராம் கஞ்சாவுடன் கைதானார். அவருக்கு கஞ்சா சப்ளை செய்து, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மே 20ல் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசெட்டிபட்டி போலீசார் அனுமதி கோரினர். நீதிபதி செங்கமலச்செல்வன் 2 நாட்கள் (மே 20 மாலை 3:00 மணி முதல் 22 மாலை 3:00 மணி வரை) அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட சங்கரிடம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரித்தார்.
லேப்டாப், அலைபேசி தொடர்புகள் குறித்து விசாரணை
நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த விசாரணைக்கு பின் போலீசார் கூறியது:
கூடலுார் வனத்துறை கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட விவகாரம், தேனி அரசு சட்டக்கல்லுாரி புதிய கட்டடத்தில் விரிசல் ஏற்பட்ட பிரச்னை, பூதிப்புரத்தில் சிறு பாலம் கட்டுவதில் முறைகேடு, தேனி லோக்சபா தொகுதி நிலவரம் அறிய என 4 முறை தேனிக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவித்தார். உங்களுடைய உதவியாளர்கள் கஞ்சா சிகரெட் பயன்படுத்துவோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்கள். உங்கள் வீட்டில் ஐந்து கஞ்சா சிகரெட்கள் பறிமுதல் செய்துள்ளோம்.
நீங்கள் பயன்படுத்துவீர்களா என கேள்விக்கு , எனக்கு பழக்கம் இல்லை. என் உதவியாளர், டிரைவர் எதற்காக அவ்வாறு கூறினர் என தெரியாது.
கஞ்சா சப்ளை செய்பவர்கள் குறித்தும் தனக்கு தெரியாது என்றார்.
கோவை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், அலைபேசியில் உள்ள தொடர்புகள் குறித்து கேட்டதற்கு மத்திய, மாநில அரசுத்துறைகள், லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறையின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் என்னிடம் நன்றாக பழகுவர். அவர்கள் தகவல் அளித்ததால் பேட்டி அளித்தேன் என்றார்.
இம்மாதிரி 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவின்படி சங்கரின் வழக்கறிஞர் கருப்பசாமிபாண்டியன், 3 முறை அவரை போலீசார் முன்னிலையில் சந்தித்து பேசினார். இன்று காலையும் விசாரணை நடக்க உள்ளது என்றனர்.

