ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஐ.டி., கார்டு; குற்றங்களை தடுக்க போலீஸ் திட்டம்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஐ.டி., கார்டு; குற்றங்களை தடுக்க போலீஸ் திட்டம்
UPDATED : மார் 15, 2025 06:09 AM
ADDED : மார் 15, 2025 02:49 AM

சென்னை,:மாநிலம் முழுதும் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை, போலீசார் துவக்கி உள்ளனர்.
பிப்ரவரி 4ம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்த, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார்; பாலியல் தொல்லைக்கும் ஆளானார்.
இச்சம்பவத்திற்கு பின், வாடகை கார், ஆட்டோ பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாநிலம் முழுதும் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
2012ல், சென்னை சென்ட்ரலில், ரயில்வே போலீசார் வாயிலாக, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தற்போது, இந்த நடைமுறையை மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அதில் இடம் பெறும் தகவல்கள் குறித்து, ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். அடையாள அட்டையில், புகைப்படம், பெயர், வீட்டு முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதன் வாயிலாக, அவர்கள் எங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர். பயணியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.