ADDED : செப் 03, 2024 01:09 AM

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில், 25ம் தேதி மென்பொறியாளரான இளம்பெண், அவரது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு சாதாரண உடையில் வந்த நபர், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி, மென் பொறியாளரிடம் தவறாக நடந்துள்ளார். அப்போது, அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, அப்பெண் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். ரயில்வே போலீசார் விசாரித்து, சென்னை காவல் துறைக்கு விசாரணையை மாற்றினர்.
அதன்படி, தென்சென்னை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் ஆகியோர் தலைமையில், சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இளம் பெண்ணிடம் தவறாக நடந்தது. சைதாப்பேட்டை குற்றப்பிரிவு போலீஸ்காரர் கமலக்கண்ணன் என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நேரத்தில் அவருக்கு அங்கு பணி ஒதுக்கப்படாத நிலையில், ரயில் நிலையத்திற்கு சென்று இருப்பதும் தெரிய வந்தது.
எனவே, குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.