ADDED : ஆக 27, 2024 01:08 AM
துாத்துக்குடி: நாடு முழுதும், 12 பெரிய துறைமுகங்களின் ஊழியர்கள், நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
துாத்துக்குடியில், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க செயலர் ரசல், ஐ.என்.டி.யூ.சி, அமைப்பு செயலர் கதிர்வேல் மற்றும் எச்.எம்.எஸ்., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட துறைமுக தொழிற்சங்கத்தினர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடு முழுதும் உள்ள துறைமுகங்களில் பணிபுரியும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவு ஊழியர்களுக்கு, 2022 ஜனவரி முதல் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இதற்காக அமைக்கப்பட்ட குழு ஏழாம் கட்ட பேச்சு நடத்தியும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
லாபம் ஈட்டக்கூடிய பெரிய துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
ஒப்பந்த ஊழியர்களை துறைமுக ஊழியர்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, கோல்கட்டா, மும்பை, கொச்சி.
எண்ணுார் உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், நாளை காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று ஊதிய ஒப்பந்த பேச்சு நடக்க உள்ளது.