ADDED : ஜூன் 27, 2024 01:52 AM
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
l நிதித் துறை மற்றும் கருவூல கணக்கு துறை அலுவலர்களின் நிதி மேலாண்மை மற்றும் தரவு பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்
l ரிசர்வ் வங்கி, மாநில கணக்காயர் மற்றும் அரசு துறைகளை ஒருங்கிணைத்து, கருவூல கணக்கு துறையின் கட்டுப்பாட்டில் இணைய கருவூலம் அமைக்கப்படும்
l தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப தமிழக நிதி விதி தொகுப்பு திருத்தி எழுதப்படும்
l அரசு அறிவித்த திட்டங்களின் இலக்கை, அரசு துறைகள் மற்றும் முகமைகள் அடைந்துள்ளதா என்பதை விரிவாக ஆய்வு செய்வதற்கு செயல் திறன் தணிக்கை செய்யப்படும். இதற்கென தலைமை தணிக்கை இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்
l பருவநிலை மாற்றம், காடுகள், நீர்வள ஆதாரங்கள், நில பயன்பாடு, நிலப்பரப்பு, கடலோரப் பகுதிகள், சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட ஒன்பது முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, நில பயன்பாட்டு தகவல் அமைப்பு உருவாக்கப்படும்
l சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பொருளியல் கல்வி நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றுடன் மாநில திட்டக்குழு இணைந்து, பொது மேலாண்மை தொடர்பான ஆறு மாத சான்றிதழ் படிப்பை துவங்கும்
l அரசு திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் யாராவது விடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியவும், அரசு அலுவலர்களுக்கு தரவுகள் பகுப்பாய்வு பயிற்சி வழங்கப்படும்.
இலங்கை அகதிகளுக்கு
மனநல பயிற்சி
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:
* மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்
* இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலைகள், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும். மரம் நடுதல், நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
* மாநிலத்தில் உள்ள 103 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு, மனநல விழிப்புணர்வு திட்டம், மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.
***
-------------------
முன்னாள் வீரர்களுக்கு
பேட்டரி நாற்காலி
அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
l மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்
l தையல் பயிற்சி பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, விதவைகள் மற்றும் திருமணம் ஆகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.