ADDED : மே 09, 2024 11:17 PM

ராமநாதபுரம்: மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவரத்து அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் சந்தையில் அதன் விலை இருமடங்கு குறைந்து கிலோ ரூ.400க்கு விற்கப்படுகிறது.
ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள தங்கச்சி மடம், மண்டபம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். பிற பகுதி நாற்றுகளை விட தங்கச்சிமடம் நாற்றுகள் நன்றாக வளர்ந்து வாசம் அதிகமாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
மல்லிகை பூ பங்குனி, சித்திரை சீசன் காலக்கட்டத்தில் கிலோ ரூ.300க்கு விற்கிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ. 1000 முதல் ரூ.2000த்திற்கும் மேல் விற்கிறது. தற்போது சீசனை முன்னிட்டு மண்டபம், தங்கச்சிமடம் பகுதியிலிருந்து ராமநாதபுரம் சந்தைக்கு மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இங்கு கடந்த மாதம் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்ற உதிரி மல்லிகை விலை சரிவடைந்து தற்போது கிலோ ரூ.400க்கு விற்கிறது. அடுத்த வாரம் வைகாசி முகூர்த்த நாட்களில் மீண்டும் விலை உயர்ந்து விடும் என வியாபாரிகள் கூறினர்.