ADDED : ஜூலை 07, 2024 02:09 AM

டில்லியில், பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவலா கூறியதாவது;
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான ஆயுதங்களுடன், இரவு 7:00 மணிக்கு, அவரது வீட்டிற்கு அருகிலேயே கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக, சீர்கேடு அடைந்து கிடக்கிறது. முழுதுமாக கட்டுப்பாடு இழந்து, அனைத்து விஷயங்களுமே கைமீறிப் போய் காணப்படுகின்றன.
போலீஸ் துறையை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். எனவே, இந்த சம்பவத்துக்கு அவர்தான், நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. படுகொலை செய்யப்பட்டவர், பட்டியலினத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திலும் இறந்தோர் பலரும் பட்டியல் இனத்தவரே. அவர்கள் குறித்தெல்லாம் தி.மு.க., கூட்டணியில் இருப்போர் கூட தமிழக அரசை கண்டிக்கவில்லை. இது குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கண்டிக்காமல் இருக்கிறார்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு, இனியாவது ராகுல் நேரடியாக சென்று, ஆறுதல் தெரிவிக்க வேண்டும்.
அதைச் செய்யாமல், சில ஊர்களுக்கு மட்டும் தான் சொல்வேன் என சொல்லி, பட்டியலின மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் இருந்தாலும் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -