பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு: 13 அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு: 13 அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை
ADDED : ஆக 18, 2024 12:46 AM

சென்னை: 'பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், நிதி முறைகேடு செய்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை தொடர்பாக, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில், கங்காதரன் என்பவர், 2021ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அறிக்கை தாக்கல்
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.திருமூர்த்தி ஆஜரானார். அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, கிருஷ்ணகிரி கலெக்டரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும், 22 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை துவக்கப்பட்டது. விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையின்படி, 13 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இழப்பை வசூலிப்போம்
இயக்குனரகத்திடம் குறிப்புகள் பெற்றபின், துறை ரீதியான நடவடிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். இழப்பை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்தபின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை துவங்கி விட்டதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை.
'இந்த திட்டத்தின் கீழ், மேற்கொண்டு எந்த முறைகேடும் நடந்திருப்பது, மனுதாரரின் கவனத்துக்கு வந்தால், உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகலாம்' என, கூறப்பட்டுள்ளது.

